நான் இஸ்லாமியர்களின் விரோதியா : பிரதமர் மோடியின் புது விளக்கம்

 இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்றும், இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு மறுத்தது தொடர்பாகவும், தன்னை முன்வைத்து எழுந்த பல சர்ச்சைகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்து உள்ளார்.

நடப்பு மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக, பாஜக தலைவர்கள் பெரும்பான்மை வாதம் மற்றும் பிளவுவாத அரசியலை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. அதிலும் இஸ்லாமியர்களை ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வோர் என்றும் பகிரங்கமாக மோடி பேசிய நிலையில், பாஜகவின் இஸ்லாமிய எதிர்ப்பு பெருமளவில் விமர்சிக்கப்பட்டது. ஒரு பிரதமராக அந்த வெறுப்பை முன்னெடுத்த வகையில் மோடியும் கடும் கண்டனத்துக்கு ஆளானார்.

இவற்றின் மத்தியில் பாஜக மீதான இஸ்லாமிய எதிர்ப்பு விமர்சனம், அவற்றை எதிர்க்கட்சிகள் தூண்டியது, பிரதமர் மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டு, இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்ற பாஜகவின் கொள்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும், நேற்று ஒளிபரப்பான தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக தான் பாகுபாடு காட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டை மோடி தீர்க்கமாக மறுத்தார். “நாங்கள் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களை எதிர்க்கவில்லை” என்று தனது தொலைக்காட்சி பேட்டியில் மோடி அழுத்தமாக தெரிவித்தார்.

“​​நேரு காலத்திலிருந்தே இந்தக் கதையைச் சொல்லி வருகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் எங்களை முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் என்று திட்டுகிறார்கள். அப்படியே தங்களை முஸ்லிம்களின் நண்பர்கள் என்று சித்தரிப்பார்கள். இதன் மூலம் அவர்கள் ஆதாயம் பெற்றனர். ஆனால் முஸ்லிம் சமூகம் இப்போது உண்மையை உணர்ந்துள்ளது. நான் முத்தலாக்கை ஒழித்தபோது, ​​முஸ்லிம் சகோதரிகள் தங்கள் கவலைகளில் இருந்து விடுபட்டார்கள். ஆயுஷ்மான் கார்டுகளை கொடுக்கும்போதும், கோவிட் தடுப்பூசி போடும்போதும் மோடி எவரிடமும் பாரபட்சம் காட்டவில்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்” என்று தன் மீதான முஸ்லீம்களின் விரோதி என்ற விமர்சனத்துக்கு பதிலளிக்கையில் மோடி விளக்கினார்.

அடுத்தபடியாக, இடஒதுக்கீட்டின் பலன்களை அனைவரும் பெற வேண்டும் என்றும் மோடி கூறினார். “முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்காது என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இடஒதுக்கீடு வழங்குவதற்கு மதம் அடிப்படையாக இருக்க முடியாது என்றுதான் தொடர்ந்து கூறி வருகிறேன். நாட்டில் உள்ள ஏழைகளில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் என அனைவரும் அடங்குவர். இடஒதுக்கீட்டின் பலனை இவர்கள் அனைவரும் பெற வேண்டும். பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் நீண்ட காலமாக அநீதியை எதிர்கொண்டுள்ளனர். இவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் சரியான முடிவை எடுத்ததை நாம் மறுக்கக்கூடாது” என்றும் மோடி வலியுறுத்தினார்.