”மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதால் பாஜக மிக மோசமாக தோற்கப் போகிறது” என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 3-ம் கட்டத்தில் நாடு முழுவதும் 10 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அவரது மனைவியும், மெயின்புரி மக்களவைத் தொகுதியின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளருமான டிம்பிள் யாதவ் ஆகியோர் உத்தரப் பிரதேசத்தின் சைபாயில் உள்ள வாக்குச் சாவடியில் தங்களது வாக்கை செலுத்தினர்.
வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “பாஜக மிக மோசமான தோல்வியை சந்திக்கப் போகிறது. ஏனெனில் விவசாயிகள், இளைஞர்கள், வியாபாரிகள் என மக்களில் ஒவ்வொரு பிரிவினரும் அக்கட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். நாம் கோடைகாலத்தில் வாக்களிக்கிறோம். இதற்காக பாஜகவினர் தண்டிக்கப்பட வேண்டும். இது தேர்தல் ஆணையத்தின் முடிவு என்று அவர்கள் கூறுவார்கள். பாஜகவினர் உங்களை (மக்களை) காயப்படுத்த வேண்டுமென்றே கோடையில் வாக்களிக்கச் செய்கிறார்கள். இந்த தேர்தலை ஒரு மாதத்துக்கு முன்பே நடத்தியிருக்கலாம். அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வாக்கு மக்களின் வாழ்க்கையை மாற்றும்.
புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். பாஜக தொண்டர்களும் தலைவர்களும் பல இடங்களில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மக்களிடம் கடுமையாக நடந்துகொண்ட ஒரு அதிகாரியை நான் இங்கே பார்த்தேன். அதிக எண்ணிக்கையில் வாக்களித்து இந்த அரசாங்கத்தை அகற்றுமாறு வாக்காளர் களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார்.