அமலாக்கத்துறை ரூ.35 கோடி பறிமுதல் ஜார்க்கண்ட் அமைச்சரின் தனி செயலாளர் வீட்டுப் பணியாளர் கைது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி ஆய்வில் ரூ.35.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, குற்றச்சாட்டுக்குரிய காங்கிரஸ் அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் தனிச் செயலர் மற்றும் வீட்டுப் பணியாளர் என 2 நபர்கள் திங்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.

ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் தனிச் செயலர் சஞ்சீவ் லால் மற்றும் அவரது வீட்டு பணியாளர் ஜஹாங்கீர் ஆலம் ஆகியோரை, ராஞ்சியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ35.23 கோடி ரொக்கம் மீட்கப்பட்டதை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சஞ்சீவ் லால் மற்றும் ஜஹாங்கீர் ஆலம் ஆகியோர் நள்ளிரவு வரை விசாரணை செய்யப்பட்டதை அடுத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய, ஜேஎம்எம் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நிலமோசடி தொடர்பான பணமோசடி வழக்கில், ஜேஎம்எம் தலைவரும் மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது மாமா இறந்ததை அடுத்து நேற்றைய தினம் அவர் தற்காலிக ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த சூழலில் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அமைச்சரான ஆலம்கிர் ஆலமுக்கு எதிராக அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை மேற்கொண்டது.

நேற்றைய பாஜக பிரச்சார கூட்டங்கள் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கடுமையாக விமர்சிக்கும் வகையில், ஆலம்கிர் ஆலமுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக ரொக்கம் கைப்பற்றப்பட்டன. ஊரக வளர்ச்சித் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, ராஞ்சியில், ஆலம்கிர் வீட்டு பணியாளர் ஜஹாங்கீர் ஆலம் என்பவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி வீட்டிலிருந்து ரொக்கம் கைப்பற்றப்பட்டன. ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் வீரேந்திர கே.ராம் மீதான வழக்கு விசாரணையின் நீட்சியாக இந்த சோதனையும், பண பறிமுதலும் நிகழ்த்தப்பட்டன.

குன்றுபோல குவிந்த ரூ.500 நோட்டுக்களை எண்ணுவதற்காக வங்கி ஊழியர்களைத் தவிர, 8 நோட்டு எண்ணும் இயந்திரங்களுடன் உதவிக்கு ஆட்கள் வரவழக்கப்பட்டனர். அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ள கட்டிடத்தில் மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக ஜார்க்கண்டில் சில திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் வீரேந்திர கே.ராமை பிப்ரவரி 2023-ல் அமலாக்கத்துறை கைது செய்தது.

அமலாக்கத்துறை ஆய்வு மற்றும் கைதுகள் தொடர்பாக பாஜக ஜார்கண்ட் செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷாதியோ, ”ஜார்க்கண்ட் ஆட்சியாளர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்படுவது புதிதல்ல. முன்னதாக காங்கிரஸின் ராஜ்யசபா உறுப்பினர் தீரஜ் சஹாயிடமிருந்து ரூ.350 கோடியும், சுரங்கத் துறை செயலாளரிடமிருந்து ரூ.20 கோடியும் மீட்கப்பட்டதன் வரிசையில், காங்கிரஸ் அமைச்சரின் பணியாளரிடமிருந்து ரூ35 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் ரூ30,000 சம்பளம் பெறும் சாதாரண பணியாளரிடம் இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து கிடைத்தது என்பதை அமலாக்கத்துறை தீர விசாரிக்க வேண்டும்” என்று சாடியுள்ளார்.