தெலங்கானாவை காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம்-மாக மாற்றிவிட்டார் : முதல்வர் ரேவந்த் ரெட்டியை விமர்சித்த அமித் ஷா

நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிக்க தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசு, ‘ராகுல் ரேவந்த் வரியை’ வசூலிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்

செகந்திராபாத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தெலங்கானாவை காங்கிரஸின் ஏடிஎம் மையமாக முதல்வர் ரேவந்த் ரெட்டி மாற்றிவிட்டார். தெலங்கானா மக்கள் ‘ஆர்ஆர்’ வரியால் தங்கள் பணத்தை இழக்கிறார்கள். தெலங்கானாவில் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால், இந்த ஏடிஎம்மில் பணம் இல்லாமல் போவதை நாங்கள் கவனித்துக்கொள்வோம். தெலங்கானாவில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான கோடிகள் ‘டெல்லி தர்பார்’க்கு அனுப்பப்படுகிறது.

சமீபத்தில் நடந்த தேர்தல் பேரணியில் குழந்தைகளை ஈடுபடுத்தி நடத்தை விதிகளை மீறியதாக ஹைதராபாத் போலீசார் எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் ரேவந்த் ரெட்டியைப் போல் நான் அழமாட்டேன். அதை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் செல்வேன்.

எனது வீடியோவை சிதைத்து போலியான வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ரேவந்த் ரெட்டியின் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால், ரேவந்த் ரெட்டி, டெல்லி போலீஸ் எனக்குப் பின்னால் இருப்பதாகச் சொல்கிறார். போலி வீடியோவை வெளியிட்டால் என்ன நடக்கும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “முஸ்லிம்களுக்கு’’ வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது. தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அதை ரத்து செய்வோம். கடந்த 10 ஆண்டுகளாக எங்களுக்கு பெரும்பான்மை இருந்தும், இடஒதுக்கீட்டை ரத்து செய்யவில்லை. ஆனால், காங்கிரஸ், பிஆர்எஸ் மற்றும் மஜ்லிஸ் முஸ்லீம்களை திருப்திப்படுத்தும் செயலில் ஈடுபடுகின்றன.

அதே நேரத்தில் ராம நவமி ஊர்வலத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் வாக்கு வங்கி ஒன்றுதான். அவர்கள் ஹைதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் சிஏஏ மற்றும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள்” என்று அமித் ஷா கூறினார்.