ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் தனிச் செயலர் சஞ்சீவ் லாலின் உதவியாளர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை ரூ.20 கோடிக்கும் அதிகமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணத்துக்கு முறையான கணக்குகள் ஏதும் இல்லை.
இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோக்களில் பெரிய பைகளில் இருந்து கட்டுக்கட்டாக பணம் எடுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்தப் பணம் பெரும்பாலும் ரூ.500 முகமதிப்பு கொண்டவையாக உள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் ஆலம் கிர் (70), காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராவார். பாக்கூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவருடைய தனிச் செயலரின் உதவியாளர் வீட்டில் இத்தகைய பெரும் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கடந்த ஆண்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ஊரக வளர்ச்சித் துறை தலைமைப் பொறியாளர் வீரேந்திர குமார் ராம் மீதான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக இன்று சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் வீரேந்திர குமார் ராம் மீது டெண்டர் ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டி அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. தொடர்ந்து அவரைக் கைதும் செய்தது. ஊழல் பணம் கொண்டு அவரும் அவரது குடும்பத்தினரும் சொகுசு, ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டி ரூ.39 கோடி மதிப்பிலான அவருடைய சொத்துக்களை முடக்கியது. இந்நிலையில் ஓராண்டுக்குப் பின்னர் அதே துறை அமைச்சரின் தனிச் செயலாளரின் உதவியாளர் வீட்டில் கோடிக் கணக்கில் பணத்தை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.