வெட்டிப்போட்ட சாதி, கைதூக்கி விட்ட கல்வி : சாதித்துக் காட்டிய நாங்குநேரி மாணவர் சின்னதுரை

சாதி வெறியோடு தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நாங்குநேரி மாணவர் சின்னதுரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசுப் பள்ளியில் பயின்று வந்தவர் மாணவர் சின்னதுரை. பட்டியலினத்து மாணவர் என்பதற்காகவே இவர் மீது பள்ளியில் பயின்ற சில மாணவர்கள் காழ்ப்புணர்ச்சியோடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி இரவு, சின்னதுரையின் வீட்டிற்கு வந்த அவருடன் படிக்கும் சக மாணவர்கள், சின்னதுரையை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அதனை தடுக்க முயற்சி செய்த சின்னதுரையின் தங்கை சந்திரா செல்விக்கும் படுகாயம் ஏற்பட்டது.

தனது பேரன், பேத்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட தகவல் அறிந்த சின்னதுரையின் தாத்தா மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தமிழ்நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு ஆதரவாக இருந்த சிலரும் கைதுசெய்யப்பட்டனர். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னதுரை பாடங்களை தொடர்ந்து பயில அவரது ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினர்.

மார்ச் மாதம் நடந்த 12-ம் வகுப்பு பொது தேர்வை மருத்துவமனையில் இருந்தபடியே உதவியாளர் ஒருவர் மூலம் சின்னத்துரை எழுதினார். அவரது தங்கை சந்திரா செல்வியும் பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதினார்.

இந்த நிலையில் இன்று வெளியான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், சின்னத்துரை 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழில் 71, ஆங்கிலத்தில் 93, எக்கனாமிக்ஸ் 42, காமர்ஸ் 84, அக்கவுண்டன்சி 85, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் 94 என மொத்தம் 469 மதிப்பெண்களை அவர் பெற்றுள்ளார். மாணவர் சின்னதுரையின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.