கன்னியாகுமரி அருகே கணபதிபுரத்தில் கடலில் குளித்த இரண்டு மாணவிகள் உட்பட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் கடல் அலையில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 12 பேர் நாகர்கோயிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக நேற்று நாகர்கோயில் வந்துள்ளனர். திருமணத்தை முடித்துவிட்டு இன்று காலை கன்னியாகுமரிக்கு வந்து சூரிய உதயத்தை கண்டு களித்தனர். பிறகு, காலை 10 மணி அளவில் கணபதிபுரம் அருகே லெமூர் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த அலையில் சிக்கி மூன்று மாணவிகள் உள்பட ஆறு பேர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
அதைப் பார்த்த சக மாணவர்களும் அப்பகுதியில் இருந்தவர்களும் கடலுக்குள் இறங்கி மாணவர்களை காப்பாற்ற முயன்றனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு அவர்களில் ஒரு மாணவியை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டவர்களில் நான்கு மாணவர்கள் தீயணைப்பு மற்றும் காவல்துறையினரால் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் ஒரு மாணவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இறந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.