காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் : இந்திய விமானப்படை வீரர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் காயம் அடைந்த ஆறு இந்திய விமானப்படை வீரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது, திடீரென  பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில்  6 இந்திய விமானப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். 

இதனால் உடனடியாக அவர்கள் உயர் சிகிச்சைக்காக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இருவரின்  நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சூரன்கோட்டின் சனாய் கிராமத்தில் நடந்த இந்த திடீர் தாக்குதலையடுத்து  அப்பகுதிக்கு கூடுதல் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சற்று நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்திய வீரர்கள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு வனப்பகுதியில் சென்று மறைந்துகொண்ட பயங்கரவாதிகளை வளைக்கவும், பாதுகாப்பினை பலப்படுத்தவும் அங்கே மேலும் கூடுதல் ராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

உள்ளூர் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவினர் அப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். ஷாசிதார் அருகே  ஜெனரல் பகுதியில் உள்ள விமான தளத்தில் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ள வீரர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளில் இந்த திடீர் தாக்குதலையடுத்து ஜம்மு  – பூஞ்ச் நெடுஞ்சாலையில் இந்திய ராணுவம் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.