கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூ.2.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அப்போது நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், “தண்டனையை குறைத்து வழங்க வேண்டும். மேலும், தங்கள் தரப்பு வாதங்களை தெரிவிக்க, தண்டனையை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும்” என வாதிட்டார். அதன்படி, தண்டனை விவரம் அறிவிப்பு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் வாதிடுகையில், “நிர்மலா தேவியால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் புகார் அளித்த மாணவிகள் சமூகத்தில் எந்த வகையிலும் ஒடுக்கப்படவும் இல்லை, ஒதுக்கப்படவும் இல்லை. அவர்கள் சராசரி மனிதர்களாகவே இயல்பாக வாழ்ந்து வருகின்றனர். நிர்மா தேவியால் அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. எனவே, அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
நிர்மலா தேவி மீது காவல்துறை பதிவு செய்த இந்த 4 பிரிவுகளில் 2 பிரிவுகள் இந்த வழக்கிற்கு பொருந்தாது. இதில் யாரும் பாதிக்கப்படவில்லை. அப்படி உள்ள போது நிர்மலா தேவி செய்த செயலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவிகள் எந்த வகையிலும் நேரடியாக பாதிக்கவில்லை. அதனால் அவருக்கு 2 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க வேண்டும்” என தனது வாதத்தை முன்வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனது வாதத்தை முன்வைத்த அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகர், “மாணவிகள் பாதிக்கப்படவில்லை. ஆனாலும் பாதிக்கப்படுவார்கள் என்று தான் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகளில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான சில உத்தரவுகளை வழங்கி இருக்கின்றது. அதன் அடிப்படையில் குறைந்தபட்ச தண்டனை வழங்கிவிடாமல் இந்த நீதிமன்றம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
துன்புறுத்தும் வகையில் பேசி குற்றத்துக்கு அழைத்ததே குற்றம்தான். சாட்சிகளிடம் விசாரணை முறையாக நடைபெற்றுள்ளது. எனவே, இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிர்மலா தேவிக்கு எந்த வகையிலும் தண்டனையை குறைத்து விடக் கூடாது என்பது தான் எங்கள் தரப்பு வாதம்” என தனது தரப்பு வாதத்தை முன் வைத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தற்போது தனது அறைக்கு சென்றார். சில மணிநேரங்களில் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, தீர்ப்பளித்த நீதிபதி பகவதியம்மாள், பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக அறிவித்தார். மேலும், ரூ.2.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, நிர்மலா தேவி பலத்த பாதுகாப்புடன் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.