சத்தியமங்கலம் அருகே சாலை விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகி இருக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நள்ளிரவு 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டம் சிறுமுறை ஜடையம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்றிரவு கரூரிலிருந்து ஜடையம்பாளையத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது நெசவாளர் காலனி என்ற இடத்தில் பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி விரைந்த கார் ஒன்றுடன், முருகனின் கார் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் ஜடையம்பாளையம் முருகன் மற்றும் அவரது மனைவி ரஞ்சிதா, இவர்களின் குழந்தைகளான 8 வயது மகன் அபிஷேக் மற்றும் 7 வயது நித்திஷா ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து காரணமாக இவர்கள் உயிரிழந்தது பின்னர் மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது. நால்வரில் நித்திஷா மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததும், குடும்பத்தின் இதர 3 பேர்களும் விபத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததையும் மருத்துவர்கள் உறுதி செய்தனர். இவர்களின் சடலங்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் காத்திருக்கின்றனர்.

விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் பவானிசாகர் போலீஸார், விபத்துக்கான காரணமாக கல்லூரி மாணவர்கள் பயணித்த காரை அடையாளம் கண்டுள்ளனர். பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கல்லூரி மாணவர்களான சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மோகன் (21), சேலத்தை சேர்ந்த சுஜித் (21) திருப்பூரைச் சேர்ந்த விஷால் பத்ரி (21) மற்றும் கார் ஓட்டுநர் ஓசூரைச் சேர்ந்த அக்சரா (21)  ஆகியோர் பயணித்த கார், முருகனின் கார் மீது மோதியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்களின் காரும் கடும் சேதம் அடைந்தபோதும், அவர்கள் அனைவரும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

விபத்தில் இறந்த சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்த முருகன் , கொசுவலை வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக இவர் கரூருக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இம்முறையும் அவ்வாறு சென்று திரும்பும்போது, நள்ளிரவில் இவரது கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வாகன விபத்தில் பலியாகி இருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.