விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை விவிபாட் இயந்திர ஒப்புகை சீட்டுகளுடன் நூறு சதவீதம் எண்ணக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாக்கியராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், 216 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விட அறிவிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தன. 126 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை விட சுற்றுகளின் முடிவுகளில் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கை குறைவாக இருந்தன.

தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் விவிபாட் இயந்திரங்களை இணைத்து, அதில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ண உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதே விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.