“பொய்மையே வெல்லும் என்பதுதான் மோடியின் கொள்கை” – ஜெய்ராம் ரமேஷ் சாடல்

“பொய்மையே வெல்லும் என்பதுதான் பிரதமர் மோடியின் கொள்கை” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார். பிரதமர் மோடி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி விமர்சித்திருந்ததற்கு ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

“பிரதமர் மோடி பொய்களைப் பரப்பி வருகிறார். ஆட்சிப் பீடத்தில் இருந்து வெளியேற உள்ள பிரதமர் மோடி காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பற்றி அப்பட்டமான, பொய்யை சற்றும் வெட்கப்படாமல் கூறி வருகிறார். அவர் ஒவ்வொரு முறை பேசும்போதும் உண்மையை சிதைக்கிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நேரடி, மறைமுக, வாரிசு வரி விதிப்பு பற்றி எந்தத் தகவலுமே இல்லை. பொய்மையே வெல்லும் என்பதே மோடியின் கொள்கையாக உள்ளது” என்று ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி, “அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் என்பது வெறும் விளம்பரங்கள் அல்ல. அவற்றை வாசித்து ஆராய்ந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டியது ஊடகங்களின் கடமை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வாசித்தவுடனேயே இதைப் பற்றி நான் முதல் நாளே கருத்து தெரிவித்தேன். அதில் முஸ்லிம் லீக் அடையாளம் இருப்பதாக உணர்ந்தேன்.

ஊடகங்கள் காங்கிரஸ் அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சி கொள்ளும் என நினைத்தேன். ஆனால், அவை காங்கிரஸ் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தன. அதன்பின்னரே நான் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் எதிர்மறையான விஷயங்களை யாரேனும் வெளிக்கொண்டு வருவார்கள் என நான் 10 நாட்கள் வரை காத்திருந்தேன். அது நடக்காத நிலையில், நானே உண்மையைச் சொல்ல நிர்பந்திக்கப்பட்டேன்” என்று தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு ஜெய்ராம் ரமேஷ் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளார்.

இவை ஒருபுறம் இருக்க இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காண்டி பாம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மத்தியப் பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜய்வார்கியா பாஜகவில் இணையும்படி அழைப்பும் விடுத்திருக்கிறார். சூரத்தைத் தொடர்ந்து இந்தூரிலும் காங்கிரஸ் வேட்பாளர் சர்ச்சை அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.