பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனுதாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த பெண் எஸ்பிக்கு, சிறப்பு டிஜிபியாக பதவி வகித்து வந்த ராஜேஷ் தாஸ் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெண் எஸ்பி புகார் கொடுக்க முயற்சித்த போது, அதனை செங்கல்பட்டு எஸ்பி-யாக இருந்த கண்ணன் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கின் விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தன் மீதான மூன்று ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் இந்த தண்டனையை நிறுத்தி வைக்க வலியுறுத்தி ராஜேஷ் தாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் ராஜேஷ் தாஸை கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் அவரது வீட்டிற்கு சென்ற போது அவர் தலைமறைவாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.