“வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஆனால், அதை நடக்க விடமாட்டேன்” என்று பிரதமர் மோடி உறுதியாக கூறியுள்ளார்.
இது குறித்து கர்நாடகாவின் பாகல்கோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கர்நாடகாவில், அரசியலமைப்பை மாற்றவும் பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறிக்கும் பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஆனால், அதை நடக்க விடமாட்டேன்.
நமது அரசியலமைப்பு சாசனம் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஏற்கவில்லை. ஆனால், கர்நாடக அரசு ஓபிசி இடஒதுக்கீட்டில் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால், காங்கிரஸ் இதற்குத் தீர்வு காண மாட்டார்கள். மத அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என்று அவர்கள் ஏற்கெனவே தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். இந்த முறையும் அவர்களின் தேர்தல் அறிக்கையில் அதேபோன்ற ஒரு சிக்னலும் கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸின் இத்தகைய நோக்கங்களை வெற்றியடைய விடமாட்டேன். உங்கள் உரிமைகளை பாதுகாக்க, உங்கள் இடஒதுக்கீட்டை பாதுகாக்க மோடி எந்த எல்லைக்கும் செல்வார். இதை நான் உங்களுக்கு உறுதியளித்துக் கொள்கிறேன். 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அவர்களால் வறுமையை ஒழிக்க முடியவில்லை. தேர்தல் சமயங்களில் போலியாக என் குரலில் வீடியோக்களை உருவாக்கி வருகிறார்கள்” என்று பிரதமர் மோடி பேசினார்.