கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடைவெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
கோழிக்கோடு மாவட்டம் குற்றச்சிரா பகுதியை சேர்ந்த அணிஸ் அகமது (வயது 66) என்பவர் கோழிக்கோடு நகர வாக்குச்சாவடியில் பூத் ஏஜெண்டாக பணியாற்றினார். அவர் பணியின் போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அருகே உள்ள வாணி விலாசினி பகுதியை சேர்ந்த சந்திரன் (68) என்பவர் ஓட்டு போட சென்ற போது மயங்கி விழுந்து இறந்தார். மேலும் ஆலப்புழா மாவட்டம் அம்பலப்புழா கக்காழம் பகுதியை சேர்ந்த டி.சோமராஜன் (76), மலப்புரம் மாவட்டம் திரூரை சேர்ந்த மதரசா ஆசிரியர் சித்திக்(63), பாலக்காடு பெருமாட்டி அருகே விளையோடி பகுதியை சேர்ந்த கண்டன் (73), பாலக்காடு மாவட்டம் தேங்குரிசி அருகே வடக்கேத்தரா பகுதியை சேர்ந்த சபரி (32) ஆகிய 6 பேர் வாக்களித்து வந்து விட்டு சென்ற போது வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்து இறந்தனர்.
தற்போது மேலும் 4 பேர் இதேபோல் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நாதாபுரத்தை சேர்ந்த மாமி (65), தொட்டில் பாலத்தை சேர்ந்த பினீஷ் (42), திருச்சூரை சேர்ந்த நாராயணன் (77), இடுக்கியை சேர்ந்த வள்ளி (45) ஆகியோரும் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டு விட்டு சென்ற போது வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்தாத கூறப்படுகிறது. இதனை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.