டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சிறையில் இரண்டு யூனிட் இன்சுலின் தொடர்ந்து எடுக்கவேண்டும். அவர் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறார் என டெல்லி நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், எய்ம்ஸ் மருத்துவமனையின் 5 மருத்துவர்கள் கொண்ட குழு இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் கேஜ்ரிவாலின் உடல்நிலையை ஆய்வு செய்தது. திகார் சிறையின் இரண்டு மருத்துவர்களும் கலந்து கொண்ட இந்த காணொலி சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
ஆய்வுக்குப் பின்னர் பேசிய மருத்துவர்கள் குழு, “அர்விந்த் கேஜ்ரிவால் ஏற்கெனவே எடுத்துக் கொண்ட அதே மருந்துகளைத் தொடருமாறு எங்கள் குழு கேட்டுக் கொண்டது. சிறையில் இரண்டு யூனிட் இன்சுலின் அளவைத் தொடருமாறும் கேஜ்ரிவால் கேட்டுக் கொள்ளப்பட்டார். கேஜ்ரிவால் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில் கேஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 320 ஆக உயர்ந்ததை அடுத்து, அவருக்கு திகார் சிறையில் இன்சுலின் டோஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த வாரம், வீடியோ கான்பரன்சிங் மூலம் தனது மருத்துவரிடம் தினமும் ஆலோசனை பெற வேண்டும் என்ற கேஜ்ரிவாலின் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது. இருப்பினும், டைப் 2 நீரிழிவு நோயாளியான அவருக்கு இன்சுலின் தேவையா இல்லையா என்பதைத் தீர்மானிக்க, எய்ம்ஸ் மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் குழுவை அமைக்குமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கேஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்த உணவையும் வழங்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. ஆனால் அது அவருக்கு மருத்துவர் வழங்கிய உணவு அட்டவணையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறியது.
முன்னதாக, கேஜ்ரிவால் வேண்டுமென்றே மாம்பழம், ஆலு பூரி, இனிப்பு வகைகளை சாப்பிட்டு அவரது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தி மருத்துவ ஜாமீன் பெறுவதற்கு காரணமானதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியதை அடுத்து இந்த நீதிமன்ற உத்தரவு வெளியானது. சர்க்கரை நோய்க்கான இன்சுலின் மற்றும் பிற மருந்துகளை அளிக்காமல் கேஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதி செய்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக கேஜ்ரிவால் மார்ச் 21 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் ஏப்ரல் 1ம் தேதி முதல் திகார் சிறை எண் 2ல் அடைக்கப்பட்டுள்ளார்.