சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் 2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் கன்னூஜ் தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. 2019ல் அசம்கர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அகிலேஷ், 2022 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்தநிலையில் தான் மீண்டும் கன்னூஜ் தொகுதியில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இதற்காக இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னூஜ் தொகுதி அகிலேஷ் யாதவ்வின் குடும்ப தொகுதி போன்றது. அகிலேஷின் தந்தை முலாயம் சிங் யாதவ் ஒருமுறையும், அகிலேஷ் மூன்று முறையும், அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் ஒரு முறையும் இந்த தொகுதியில் வென்று எம்பி ஆகியுள்ளனர்.
2019ல் இந்த தொகுதியில் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிட்டார். எனினும், பாஜக வேட்பாளர் அவரை தோற்கடித்து வெற்றிபெற்றார். இந்த நிலையில் தான் தனது ஆஸ்தான தொகுதியில் அகிலேஷ் மீண்டும் களமிறங்கவுள்ளார். முன்னதாக, கன்னூஜ் தொகுதியின் சமாஜ்வாதி வேட்பாளராக அகிலேஷின் உறவினர் தேஜ் பிரதாப் சிங் யாதவ் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை வாபஸ் பெற்று தற்போது அகிலேஷே போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 63-ல் சமாஜ்வாதி கட்சியும், 17 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.