அசாம் மாநிலம் கவுகாத்தியில் 2004-ம் ஆண்டு நடந்த தீவிரவாதிகள் உடனான சண்டையில் வீர மரணம் அடைந்த ராஜபாளையத்தைச் சேர்ந்த ஹவில்தார் சாமிக்கண்ணனுக்கு அறிவிக்கப்பட்ட ‘வீர் நாரி’ விருதை, அவரின் வீட்டுக்கு நேரடியாக வந்த ராணுவ அதிகாரிகள், சாமிக்கண்ணன் குடும்பத்தினரிடம் வழங்கினர்.
ராஜபாளையம் அருகே ஆவாரம்பட்டியைச் சேர்ந்த சாமிக்கண்ணன் என்பவர் இந்திய ராணுவ இன்டெலிஜென்ஸ் மற்றும் பீஃல்டு செக்யூரிட்டி பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உல்பா தீவிரவாதிகள் 3 பேர் பதுங்கி இருப்பதாக சாமி கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்த ராணுவ படைக்கு தகவல் தெரிவித்த சாமிக்கண்ணன், தீவிரவாதிகளை பிடிக்கச் சென்றார். அப்போது நடந்த சண்டையில் ஹவில்தார் சாமி கண்ணன் வீர மரணம் அடைந்தார்.
தீவிரவாதிகள் மூன்று பேரையும் ராணுவத்தினர் கைது செய்தனர். 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்தில் ஹவில்தார் சாமிக்கண்ணனுக்கு மத்திய அரசு சவுரிய சக்ரா விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள இன்டலிஜென்ஸ் பயிற்சி அகாடமியில் இந்திய ராணுவத்தின் இன்டெலிஜென்ஸ் கோர் பிரிவு நிறுவன நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் இன்டெலிஜென்ஸ் கோர் லெப்டினன்ட் ஜெனரல் பிரதீப் குமார் சாஹல், வீர மரணம் அடைந்த இன்டெலிஜென்ஸ் வீரர்களுக்கு ‘வீர் நாரி’ விருது வழங்கி கவுரவித்தார்.
அப்போது நேரில் வர இயலாத ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வீடுகளுக்கே சென்று விருது வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி வியாழக்கிழமை ராஜபாளையத்தில் உள்ள, வீர மரணமடைந்த ஹவில்தார் சாமிக்கண்ணன் வீட்டுக்கு வந்த இன்டெலிஜென்ஸ் கோர் அதிகாரி சுபேதார் எஸ்.சுரேஷ், கமாண்டிங் மேஜர் எஸ்.பொற்செல்வன் ஆகியோர், சாமிக்கண்ணு மனைவி பாண்டிச்செல்வியிடம் ‘வீர் நாரி’ விருது, வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி கவுரவித்தனர்.