“காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை, எனது இறுதி சடங்குக்காவது வாருங்கள்” – கார்கே உணர்ச்சிகர பேச்சு

“காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை… எனது இறுதி சடங்குக்காவது வாருங்கள்” என்று தனது சொந்த மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உணர்ச்சிகரமாக பேசினார்.

கர்நாடக மாநிலத்தில் தான் பிறந்த சொந்த மாவட்டமான கலபுர்கியின் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியது: “காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை எனது இறுதி ஊர்வலத்துக்காவது வாருங்கள். நீங்கள் காங்கிரஸுக்கு ஓட்டு போடுகிறீர்களோ இல்லையோ, கலபுர்சிக்காக நான் பாடுபட்டு இருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், என்னுடைய இறுதி சடங்குக்கு வாருங்கள்.

இந்த முறை இந்தத் தொகுதியில் காங்கிரஸுக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், இனி எனக்கான இடம் இங்கு இல்லை என்றும், உங்களின் மனங்களை என்னால் வெல்ல முடியாது என்றும் நினைப்பேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். தேர்தலில் போட்டியிட்டாலும் சரி, போட்டியிடவில்லை என்றாலும் சரி, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன். அதுவரை அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்.

அதேபோல் ஒருவர் தனது கொள்கையில் இருந்து ஒருபோதும் ஓய்வு பெறக் கூடாது. சித்தராமையாவிடம் கூட ‘நீங்கள் முதல்வர், எம்எல்ஏ போன்ற பதவிகளில் இருந்து ஓய்வு பெறலாம். ஆனால் ஆர்எஸ்எஸ், பாஜக சித்தாந்தங்களை முறியடிக்கும் வரை அரசியலில் இருந்து ஓய்வுபெற முடியாது என்று பலமுறை கூறி இருக்கிறேன்” என்று பேசினார்.