பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் அழுத்தத்துக்கு இடையே தேர்தல் ஆணையம் ஆய்வைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் பேச்சு குறித்து காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனித்தனியே தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி அளித்த புகாரில், பிரதமரின் பேச்சு பிரிவினையை தூண்டுவதாக, தவறானதாக,. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிவைப்பதாக இருப்பதாகக் கூறியிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, “தேர்தல் ஆணையம் எங்களின் புகாரை ஆராய்ந்து உடனடியாக மோடிக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவர் சார்ந்த பாஜகவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத துவேஷங்களை ஏற்படுத்துதல், வெறுப்பை விதைத்தல் போன்ற குற்றங்களுக்காக முதல் தகவல் அறிக்கை பதிவி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மவுனம் காப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்தச் சூழலில் அதிகரிக்கும் அழுத்தங்களுக்கு இடையே தேர்தல் ஆணையம் புகார்களை ஆய்வு செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.