அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது : மதுரை – விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு

உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக அகற்றக்கோரி மதுரை – விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா கே.சென்னம்பட்டி கிராம பகுதியில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு இறைச்சி கழிவுகளை சுத்திகரித்து உரமாக மாற்றும் பணி நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசு படுவதாக 6 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மக்களவைத் தேர்தலை புறக்கணித்தனர்.

இதனிடையே, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் மதுரை மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக அறிக்கை கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுவதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிராமத்தில் உள்ள பொதுமக்களுடன் ஆலை விவகாரம் தொடர்பாக இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு அவர் காத்திருப்புப் போராட்டம் நடத்தினார். அப்போதும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் மதுரை – விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதன் பிறகு வந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்தார் ஆர்.பி.உதயகுமார். அதனால் அவர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.