“சொல்வதைச் செய்யாததே மோடியின் கேரன்டி” – கார்கே விமர்சனம்

“ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் தருவதாக நரேந்திர மோடி கூறியிருந்தார். வெளிநாட்டில் காங்கிரஸ் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பேன் என்றார். அந்தப் பணம் எங்கே?” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் தருவதாக நரேந்திர மோடி கூறியிருந்தார். வெளிநாட்டில் காங்கிரஸ் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பேன். அந்தப் பணம் எங்கே? அடுத்த தேர்தலில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றார். இப்போது மீண்டும் பிரதமர் மோடியின் கேரன்டி என சொல்லி கொண்டிருக்கிறார். அவர் எதையும் செய்ய மாட்டார். அதுதான் மோடியின் கேரன்டி” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், “பாஜக ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இதுவரை தேசத்துக்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்? தேசிய இயக்கத்தில் கூட பங்கேற்கவில்லை. தேர்தலுக்காக, தாலி பாதுகாப்பாக இருக்காது என்று மக்களிடம் மோடி பொய் சொல்கிறார். இந்த நாட்டை 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஒருமுறையாவது இப்படி நடந்திருக்கிறதா?.

1962 போரின்போது இந்திரா காந்தி தன்னுடைய நகைகளை நன்கொடையாக வழங்கினார். சுதந்திர இயக்கத்துக்காக மோதிலால் நேரு மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் அலகாபாத்தில் உள்ள தங்கள் வீட்டை நன்கொடையாக வழங்கினர். நமது தலைவர்கள் வாழ்ந்து, தேசத்துக்காக தங்கள் உயிரை, ரத்தத்தை தியாகம் செய்துள்ளனர்” என்று கார்கே தெரிவித்தார்.