மலேசியாவில் கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் பலி

மலேசியாவில் கடற்படை ஒத்திகை நிகழ்ச்சியின்போது நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்தனர்.

மலேசியாவின் லுமுட் நகரில் கடற்படைத் தளத்தில் ராயல் மலேசியன் கடற்படை அணிவகுப்பு ஒத்திகை இன்று நடந்தது. அப்போது நடுவானில் இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதி 10 பேர் வரை உயிரிழந்தனர். நடுவானில் ஹெலிகாப்டர் ஒன்று மற்றொரு ஹெலிகாப்டரின் காற்றாடி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இதில், ஏழு பேரை ஏற்றிச் சென்ற HOM M503-3 ரக ஹெலிகாப்டர் ஓடு பாதையில் கீழே விழுந்ததில் ஏழு பேரும் உயிரிழந்தனர். அதேபோல் மூன்று பேரை ஏற்றிச் சென்ற Fennec M502-6 ரக ஹெலிகாப்டர் நீச்சல் குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இருந்த யாரும் உயிர் பிழைக்கவில்லை. உயிரிழந்த 10 பேரும் கடற்படை வீரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இரு ஹெலிகாப்டர்களில் இருந்த அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதிப்படுத்தப்பட்டநிலையில், அடையாளம் காண ராணுவ மருத்துவமனைக்கு சடலங்கள் அனுப்பப்பட்டுள்ளன” என்று மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது.