தைவானில் மீண்டும் நிலநடுக்கம் : அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி

தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பலமுறை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

முன்னதாக, கடந்த 3 ஆம் தேதி தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. அது, தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எனக் கூறப்பட்டது. அதில் 14 பேர் பலியாயினர். அதற்கும் முன்னதாக தைவானில் 1999-ம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 2,400 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 3-ல் ஏற்பட்டதுதான் பெரிய நிலநடுக்கம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பலமுறை நில அதிர்வு ஏற்பட்டது. சுமார் 180-க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தைவானில் இந்த வாரம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹுவாலின் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த 3 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதமடைந்த இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் இன்றைய நிலநடுக்கத்தால் மேலும் சேதமடைந்து எந்நேரமும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதுபோல் பல கட்டிடங்களும் ஆபத்தான நிலையில் உள்ளதால் இவ்வாறாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைவான் இரண்டு டெக்டானிக் தகடுகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பானதாகவே உள்ளது. தைவான் நாடு உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் சிப் தயாரிக்கும் ஒப்பந்த நிறுவனமான தைவான் செமிகண்டக்டர் மேனுஃபாக்சரிங் கோ (TSMC) தொழிற்சாலையைக் கொண்டுள்ளது. நிலநடுக்கத்தால் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பாடுகள் சிறிது நேரம் தடைபட்டதாகவும் தற்போது இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.