“அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியே இந்தியாவுக்குத் தேவை. இந்தியா கூட்டணி அரசால் மட்டுமே அதை சாத்தியப்படுத்த முடியும்” என்று காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மக்களின் சொத்துகள், வீடுகள் அபகரிக்கப்படும் என்று பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில், காங்கிரஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 2012 முதல் 2021 வரை நாட்டில் உருவாக்கப்பட்ட செல்வத்தில் சுமார் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை வெறும் 1 சதவீத மக்களிடம் மட்டுமே சென்றுள்ளது. நாட்டில் வசூலாகும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) சுமார் 64 சதவீதம் ஏழைகள், கீழ் நடுத்தர வர்க்க மக்களே செலுத்துகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பெரும்பாலான பொதுச் சொத்துகள் மற்றும் வளங்கள் அனைத்து ஒன்றிரெண்டு நிறுவனங்களின் கைகளுக்கு சென்றுள்ளது. இந்த வளர்ந்து வரும் எதேச்சதிகாரம் பணவீக்கத்துக்கு வழிவகுத்துள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இன்று 21 கோடீஸ்வரர்கள் இணைந்து 70 கோடி இந்தியர்களைவிட அதிகமான சொத்துகளை வைத்துள்ளனர். இவை குறித்து பிரதமர் மோடி ஒருபோதும் மக்களிடம் சொல்லப்போவதில்லை.
இந்தியாவுக்கு வேகமான பொருளாதார வளர்ச்சித் தேவை. இந்தியாவுக்கு பரந்த அளவிலான அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியே தேவை. இந்தியாவுக்கு பெரிய அளவிலான சூழல் சார்ந்த நீடித்த பொருளாதார வளர்ச்சி தேவை. இதனை இந்தியா கூட்டணி அரசு மட்டுமே தர முடியும்” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.