தேர்தல் ஆணையத்துக்கு ஆழ்ந்த இரங்கல் : பிரதமரின் சர்ச்சைப் பேச்சை பகிர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடியின் சர்ச்சை பேச்சு குறித்த வீடியோவை பகிர்ந்து, ’தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்’ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி துவங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. இதையொட்டி வடமாநிலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசிய பேச்சு ஒன்று சர்ச்சையாக மாறியுள்ளது.

அந்தப் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ”நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் கூறினார்கள். இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் பறிபோகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது.

அவர்கள் ஆட்சியில் இருந்தபோது தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். அதிக குழந்தை பெற்றவர்களுக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் செல்வத்தைப் பகிர்ந்து அளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தரப் போகிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கூறுகிறது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தை கூட விட்டு வைக்காது” என்று கடுமையாக பேசியிருந்தார்.

மோடியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இஸ்லாமியர்கள் மீதான, பிரதமரின் இந்த வெறுப்புப் பேச்சு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த பேச்சை தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு அதில், ‘இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்துள்ளார். பிடிஆரின் இந்தப் பதிவு இப்போது பேசு பொருளாகி உள்ளது.