சென்னையில் ரவுடி தலைமையில் போலீஸார் மீது பயங்கர தாக்குதல் : மூன்று பேர் கைது

சென்னையில் விசாரணைக்காக சென்ற போலீஸாரை கஞ்சா போதையில் தாக்கிய 3 இளைஞர்களை கைது செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சமீப காலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கஞ்சா வியாபாரிகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான உமாபதி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், தான் கஞ்சா வியாபாரம் செய்வதை காட்டிக் கொடுத்ததாக இருவரை உமாபதி கத்தியால் வெட்டியுள்ளார். இது தொடர்பாக மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை போலீஸார் உமாபதியிடம் விசாரணை நடத்துவதற்காக கண்ணகி நகர் அருகே உள்ள சுனாமி நகர் குடியிருப்பு பகுதிக்குச் சென்றிருந்தனர்.

அப்போது கஞ்சா போதையில் இருந்த உமாபதி மற்றும் அவர் நண்பர் ஆகிய இருவரும் சேர்ந்து, போலீஸார் மீது கற்களை வீசி கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் பாட்டில்களை உடைத்து தங்களை தாங்களே குத்திக் கொண்டுள்ளனர். அப்போது இந்த இருவருடனும் சேர்ந்து மேலும் மூவர் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் உமாபதியின் நண்பர்கள் சுரேஷ், பாபு, சந்தோஷ்குமார் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள உமாபதி மற்றும் அவரது நண்பரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.