ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு : நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பிடிப்பட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், வாக்களர்களுக்கு அளிப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தும், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் தரப்பில், ‘பாஜக வேட்பாளரின் உதவியாளர்களிடம் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும், திமுக மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புலன் விசாரணை நடந்து வருகிறது. பெருந்தொகைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், பணம் பறிமுதல் தொடர்பாக மனுதாரர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.