கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை இன்று பல்லடம் ரங்கநாதபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:- இது மிகப்பெரிய தேர்தல். ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது. இந்தியாவில் உள்ள 98 கோடி மக்களும் இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகாலம் யாருடைய ஆட்சி நடைபெற வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றனர்.
நம்மிடத்தில் நரேந்திர மோடி என்ற ஒரு தலைவர் இருக்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு 5 ஆண்டு காலம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்தியா கூட்டணி தலைவர்கள் இல்லாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது. 10 செம்மறி ஆடுகள் கூட ஒரு வாரத்தில் தங்கள் தலைவனையோ, தலைவியையோ தேர்ந்தெடுத்து விட்டு தான் அடுத்த வேலையை செய்யும்.
ஆனால் இந்தியா கூட்டணியில் இதுவரை யார் பிரதமர் வேட்பாளர், யார் தலைவர் என்றே தெரியாமல் தத்தளிக்கும் நிலை தான் காணப்படுகிறது. இந்த தேர்தல் பிரதமருக்கான தேர்தல். அவர் எப்படிப்பட்ட மனிதராக இருக்க வேண்டும். அவர் எப்படி இந்தியாவை வழிநடத்த வேண்டும் என்பதற்காக தான் நாம் வாக்களிக்கிறோம்.
மோடியை தவிர அந்த நாற்காலியில் வேறு யாராவது பிரதமராக வந்து அமர்ந்தால் நாடு என்னவாகும் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மோடியை தவிர மற்றவர்கள் பிரதமராக வந்தால் இந்த நாட்டை சின்னபின்னமாக்கி விடுவார்கள். எனவே நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. அதுவும் பிரதமர் மோடியே வெளியிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 4 கோடி மோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் 3 கோடி மோடி வீடுகளை கட்டி கொடுப்போம் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான, வளர்ச்சியான அரசியலை கொடுப்பது பா.ஜ.க மட்டும் தான்.
100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாள் சம்பளமாக கடந்த 10 ஆண்டுக்கு முன்பு வரை ரூ.174 தான் இருந்தது. கடந்த வாரம் வரை ரூ.284 சம்பளமாக வழங்கப்பட்டது. அதனை தற்போது ரூ.319 ஆக உயர்த்தி வழங்கி வருகிறோம். 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு தான் முழு பணத்தையும் கொடுக்கிறது. மாநில அரசு கொடுக்கவில்லை. ஸ்டாலின் கொடுக்க வில்லை. ஆனால் அவர்கள் வெறும் வாயில் ஒற்றை வரியில் பா.ஜ.க.வை உள்ளே விட்டு விடாதீர்கள். அவர்கள் வந்து விடக்கூடாது என்கிறார்கள். அதனை விளக்கும் வகையில் நாங்கள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளோம்.
அந்த வீடியோவில் ஒரு கணவனும், மனைவியும் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள். அப்போது பின்னால் அமர்ந்து இருக்கும் மனைவி, தனது கணவரிடம் ஏதோ சொல்ல வருகிறார். ஆனால் கணவர் அதனை கண்டு கொள்ளாமல் நீ பேசாமல் வா என்கிறார். இருந்தாலும் மனைவி மீண்டு பேச முற்படும் போது, கணவர், வேகமாக நீ வாக்கை மாத்தி போட்டு விடாதே. பா.ஜ.க உள்ளே வந்து விட போகிறது என்கிறார். அவர்கள் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார்கள்.
100 மீட்டர் தூரம் சென்றதும், ஒரு பூக்கடையில் கணவனும், மனைவியும் சண்டை போடுகிறார்கள். அந்த கணவன், பூக்கடையில் இருக்கும் பணத்தை எடுத்து டாஸ்மாக் கடைக்கு செல்கிறேன் என்கிறார். இன்னும் சில அடி தூரத்தில் செவிலியர்கள், அரசு பஸ் ஊழியர்கள் போராடுகின்றனர். இன்னும் சில 100 மீட்டர் தூரத்தில் காவல்துறை போதை பொருள் கடத்தலில் தொடர்புடையதாக ஆளுங்கட்சி பிரமுகரை கைது செய்து செல்கிறது.
இதனை எல்லாம் மோட்டார் சைக்கிளில் செல்லும் கணவன், மனைவி பார்த்தபடியே செல்கின்றனர். அப்போது கணவர் சொல்கிறார். தமிழகத்தில் பா.ஜ.க வருவதற்கான நேரம் வந்து விட்டது என்று. உண்மையிலேயே தமிழகத்தில் பா.ஜ.க, தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளே வர வேண்டிய நேரம் வந்து விட்டது.இது மாற்றத்திற்கான நேரம். நிச்சயமாக ஒரு கட்சி நேர்மையான ஆட்சி கொடுக்கும் என்றால் அது பா.ஜ.கவால் மட்டும் தான் முடியும்.
தமிழகத்தில் 33 மாத காலமாக ஆட்சியில் உள்ளனர். அவர்களிடம் அதிகாரம், ஆள்பலம் இருக்கிறது. இருந்தாலும் பணத்தை கொடுத்து தான் தேர்தலை சந்திக்க வேண்டிய அவல நிலை உள்ளது. அதுவும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை மின் தடை செய்து விட்டு வீடு, வீடாக சென்று ஒரு ஓட்டுக்கு ரூ.500, ரூ.1000 கொடுத்து வருகிறார்கள். 50 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகளால் நேரடியாக தேர்தலை சந்திக்க முடியவில்லை. பணத்தை கொடுத்து தான் வாக்குகளை பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.
நாம் ஏதாவது கேட்டால் பணத்தை வாங்கி கொண்டு தானே வாக்களித்தீர்கள். உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என சொல்கிறார்கள். 50 ஆண்டுகாலமாக நாம் ஏழையாக, வளர்ச்சியடையாமல் இருக்கிறோம். தமிழகத்தை திராவிட கட்சிகள் பின்னோக்கி கொண்டு சென்று விட்டனர்.
நான் கோவைக்கு என்று 100 வாக்குறுதிகள் கொடுத்துள்ளேன். 500 நாட்களில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். தி.மு.கவினர் போன்று 500-க்கும் அதிகமான வாக்குறுதிகளை கொடுத்து விட்டு, அதனை நிறைவேற்ற முடியாமல் பயந்து, பயந்து வர வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை. ஏனென்றால் நாங்கள் 100 வாக்குறுதியை 500 நாளில் நிறைவேற்றுவோம். வாக்குறுதியை நிறைவேற்றி விட்டு கம்பீரமாக வருவேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.