2024 மக்களவை தேர்தலில் ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள் : அசாமில் ஆச்சரியம்

அசாம் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 350 பேர் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் புலோகுரி நேபாளி பாம் நகரில் ரான் பகதூர் தபா என்பவரின் குடும்பம் வசித்து வருகிறது. 1997 ஆம் ஆண்டு ரான் பகதூர் காலமானார். சோனித்பூர் மாவட்டம் என்பது ரங்கப்பாரா சட்டப்பேரவை தொகுதி மற்றும் சோனித்பூர் மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது.

இவருடைய குடும்பத்தில் மொத்தம் 1,200 பேர் உள்ளனர். இந்நிலையில், வரவுள்ள மக்களவை தேர்தலில் 350 பேர் வாக்களிக்க உரிமை பெற்றவர்களாக உள்ளனர். இந்த விஷயம் மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஊரிலேயே ஒரே குடும்பத்தில் மிக அதிக அளவிலான வாக்காளர்களை கொண்டது ரான் பகதூர் குடும்பம் தான் எனக் கூறப்படுகிறது.. ரான் பகதூர் தபாவுக்கு 5 மனைவிகள் உள்ளனர். 12 மகன்கள் மற்றும் 9 மகள்களும் உள்ளனர்.

மறைந்த ரான் பகதூரின் மகன் டில் பகதூர் தாபா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “எங்களுடைய குடும்பத்தில் சுமார் 350 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். என் தந்தை 1964 இல் என் தாத்தாவுடன் இங்கு குடியேறினார். என் தந்தைக்கு ஐந்து மனைவிகள் இருந்தனர். எனக்கு 12 சகோதரர்கள் மற்றும் 9 சகோதரிகள் உள்ளனர். எங்கள் பிள்ளைகள் உயர்கல்வி படித்தார்கள் ஆனால் அரசு வேலை கிடைக்கவில்லை. எங்கள் குடும்பத்தில் ஒரு சிலர் பெங்களூரு சென்று தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தனர். சிலர் தினக்கூலிகளாக வேலை செய்கிறார்கள். எனக்கு 3 மனைவிகள் மற்றும் 12 குழந்தைகள் உள்ளனர்” என்றார். அசாமில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.