தமிழகத்தையே உலுக்கிய பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 6 வருட சிறை தண்டனையும் விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது சகோதரர் செந்தில்குமார், மோகன்ராஜின் தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள் ஆகியோர் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்தனர். அதே பகுதியில் திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார் கோழிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். வெங்கடேஷுக்கும் மோகன்ராஜ்க்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி இரவு மோகன்ராஜ் வீட்டிற்கு செல்லும் வழியில் அமர்ந்து வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் செல்லமுத்து, சோனை முத்தையா ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதனை மோகன்ராஜ் தட்டிக் கேட்டு உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து கிளம்பிச் சென்ற வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீண்டும் திரும்பி மோகன்ராஜ் வீட்டிற்கு வந்துள்ளனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மோகன்ராஜ், மோகன்ராஜின் தாய் புஷ்பவதி ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த செந்தில்குமார் மற்றும் ரத்தினாம்பாள் ஆகியோரையும் இந்த மூவரும் சேர்ந்து சரமாரியாக வெட்டினர். இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வெங்கடேஷ், செல்லமுத்து, சோனை முத்தையா, வெங்கடேஷின் தந்தை ஐயப்பன், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் கொலை சம்பவம் குறித்த விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வெங்கடேஷ் தப்பிச்செல்ல முயன்றதால் அவரது இரு கால்களிலும் போலீஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த வழக்கில் 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
திருப்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது கைது செய்யப்பட்ட 5 பேரையும் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். வெங்கடேஷ், செல்லமுத்து, சோனை முத்தையா, ஐயப்பன் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் செல்வத்திற்கு 6 வருட கருங்காவல் தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.