ஒரு மணி நேரம் கூடுதலாக பிரச்சாரம் செய்யலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்,  தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு கடைசி நாளில் மேலும் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எதிர்வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்குகளை கேட்டு பம்பரமாக சுற்றி வருகிறார்கள். அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் சுற்றுப்பயணத் திட்டங்களை வகுத்துக் கொண்டு தமிழ்நாட்டைச் சுற்றி வந்து வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். 

பகல் நேரத்தில் கடும்   வெப்பம் இருப்பதால் காலையிலேயே பிரச்சாரத்தைத் துவக்கிவிடும் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் மதிய நேரங்களில் ஓய்வெடுத்துக் கொண்டு மாலையிலிருந்து இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்கிறார்கள். 

தினமும் இரவு 10 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்த பிறகும் சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களை சந்திப்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் சென்றுள்ளன. இந்நிலையில் பிரச்சாரம் செய்வதற்கு கடைசி நாளான ஏப்ரல் 17 ம் தேதி மாலை 5 மணிக்கு பதிலாக 6 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கமாக இறுதி நாளில் மாலை ஐந்து மணியுடன் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் இந்த முறை கோடை வெயிலை கருத்தில் கொண்டு மேலும் ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. அதன்படி 17ம் தேதி மாலை 6 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு  தெரிவித்துள்ளார். மேலும் நாளை மாலையுடன் பூத் சிலிப் வழங்கும் பணிகள் முடிவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.