பொது சிவில் சட்டம், ஒரே நாடு – ஒரே தேர்தல், 3 கோடி பேருக்கு இலவச வீடு : பா.ஜனதா தேர்தல் அறிக்கை

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பா.ஜனதா கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

18-வது மக்களவை தேர்தல் வருகிற 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு மாநில மற்றும் தேசிய கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்த நிலையில் பா.ஜனதா இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியானது. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மோடி கேரண்டி என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பா.ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது.

இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பேசினார். அதன் விவரம் வருமாறு:- தமிழ்நாடு உள்பட நாட்டின் பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடன் கூடிய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளோம். இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரை மையமாக கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்க துணையாக இருந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும். பொதுவான வாக்காளர் பட்டியல் முறை அறிமுகப்படுத்தப்படும். இளைஞர்களின் கனவை நனவாக்க பணியாற்றுகிறோம். 2025- ஆம் ஆண்டு பழங்குடியினரின் பெருமை ஆண்டாக கடைபிடிக்கப்படும்.

70-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம். இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகள் தொடரும். குறைந்த விலையில் பைப் மூலமாக கேஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். முத்ரா கடன் உதவி 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும். சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான்பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று பிரதமர் மோடி பேசினார்.