இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 3 வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தானியங்கி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த 3 வழித் தடங்களில் பணிகள் முடிந்த பிறகு, 138 ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் மூன்று பெட்டிகளைக் கொண்டிருக்கும். முதல் கட்டமாக, ஒட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மூன்று பெட்டிகளைக் கொண்ட 26 மெட்ரோ ரயில்களையும், இரண்டாம் கட்டமாக 36 மெட்ரோ ரயில்களையும் தயாரிக்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் கடந்த பிப்.9-ம் தேதி தொடங்கியது. இப்பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் வரும் ஆகஸ்டில் சென்னைக்கு கொண்டு வர திட்டமிடப் பட்டுள்ளது. இந்நிலையில், தானியங்கி செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அடிப்படையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: தானியங்கி செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம், ஜிபிஎஸ், சிக்னல் ரீடிங், டைமிங் சீக்குவென்ஸ் ஆகிய தொழில் நுட்பங்களை அடிப்படையாக வைத்து இந்த மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும், மெட்ரோவில் எல்சிடி திரைகள் வைக்கப்பட உள்ளன.
இந்த ரயில்கள் பொது பயன்பாட்டுக்கு அனுப்புவதற்கு முன்பு, ஆண்டுக்கு விரிவான சோதனைக்கு உட்படுத்தப்படும். அடுத்த ஒரு மாதத்தில் இந்த ரயில்கள் தயார் செய்யப்பட்டு, அதன்பிறகு, சோதனை முயற்சி செய்யப்படும். முதல்கட்டமாக, 4-வது வழித் தடத்தில் பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே இயக்கப்படும் என்று கூறினர்.