‘வாக்குகளைப் பெறு; வாக்களித்தவர்களை மற’ என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கொள்கை என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
நாகாலாந்தின் சுமோகெடிமாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜேபி நட்டா, “நான் இங்கு காணும் உற்சாகம், நாகாலாந்து மக்கள் எங்களை வெற்றிபெறச் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது. நேர்மை, எளிமை, கடின உழைப்பு மற்றும் வலிமையின் சின்னம் நாகாலாந்து.
நாகாலாந்து மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்பு காங்கிரஸுக்கு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பை அக்கட்சி தவறாகப் பயன்படுத்தியது. தனக்கு அளிக்கப்பட்ட நேரத்தை காங்கிரஸ் ஒருபோதும் மதிக்கவில்லை. மக்களையும் அவர்களின் விருப்பங்களையும் அது மதிக்கவில்லை. காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட கொள்கை என்னவென்றால், ‘வாக்குகளைப் பெறு; வாக்களித்தவர்களை மற’ என்பதுதான். நாகாலாந்து சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு ஓர் இடம் கூட கிடைக்காததற்கு இதுதான் காரணம்.
இன்று, வடகிழக்கு மாநிலங்கள் ஒரு முழுமையான மாற்றத்துக்கு உட்பட்டுள்ளன. இந்த பிராந்தியத்தை தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியாவின் நுழைவாயில் ஆக்க பிரதமர் மோடி அயராது உழைத்து வருகிறார்.
மோடி நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை, அரசியலின் வரையறையை, அரசியல் பாணியை, அரசியலின் அணுகுமுறையை மாற்றிவிட்டார். காங்கிரஸ் ஆட்சியில், வடகிழக்கு மாநிலங்களில் பிளவுக்கு மேல் பிளவு என்ற நிலை இருந்தது. ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் தெய்வீக (DevINE) மாடலாக மாற்றப்பட்டுள்ளன. பிரதமர் மோடி வடகிழக்கில் PM-DevINE மாடலுக்கு ரூ.6,600 கோடி ஒதுக்கி உள்ளார்.
இந்தியா கூட்டணி என்பது ஊழல்வாதிகளின் கூட்டமே தவிர வேறில்லை. குடும்ப கட்சிகளால் உருவானது அந்தக் கூட்டணி. அந்தக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்று சிறையில் இருக்கிறார்கள் அல்லது ஜாமீனில் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாக ஓய்வெடுக்கட்டும். மக்களுக்காக மேலும் மேலும் வேலை செய்ய எங்களுக்கு வாய்ப்பளியுங்கள்” என்று நட்டா பேசினார்.