அதிமுக எதற்காக போட்டியிடுகிறது என்றே தெரியவில்லை : அமைச்சர் பெரிய கருப்பன் கேள்வி

நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக எதற்காக போட்டியிடுகிறது என்றே தெரியவில்லை என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து சாக்கோட்டை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டனூர், புதுவயல், சாக்கவயல் பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்களிடையே பேசிய அவர், “கடந்த 10 ஆண்டு காலமாக இந்திய பிரதமராக இருந்து தமிழகத்திற்கு பல்வேறு கேடுகளை மோடி செய்துள்ளார். தமிழர்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டு விட்டன. அதனால் அவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும். இந்தியா கூட்டணி சார்பில் மத்திய அரசு அமைய வேண்டும்.

பிரதமர் மோடி சென்ற தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல, அதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் இருக்கின்றார். தற்போது உள்ள பாரதிய ஜனதா கூட்டணி மிகவும் பரிதாபமாக உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட, சென்னையில் இருந்து ஒரு நபரை தேடித்தேடிக் கொண்டு வந்து பாஜக இங்கே நிறுத்தி உள்ளார்கள். சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் தலைமையில் இயங்கக்கூடிய நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.525 கோடி மோசடி நடந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அகில இந்திய அளவில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி போட்டியிட்டு பிரதமர் யார் என தீர்மானிக்கும் போட்டியில் இறங்கி உள்ளன. ஆனால் அதிமுக எதற்காக போட்டியிடுகின்றது என்று தெரியவில்லை. அதிமுகவிற்கும் வேட்பாளர் கிடைக்காமல் ஒரு புதியவரை இங்கே நிறுத்தி உள்ளது” என்றார்.