மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் கடிதத்தைத் தொடர்ந்து பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோரின் பெயர்களை பாஜக நீக்கியுள்ளது. கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி எழுதிய கடிதத்தில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950ன் படி, நட்சத்திரப் பேச்சாளர்கள் சொந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் அடங்கிய திருத்தப்பட்ட பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு பாஜக அளித்துள்ளது.
மகாராஷ்டிரா பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார், மத்திய இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதேபோல், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா வழங்கிய நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக, இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
பாஜக மற்றும் சிவ சேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) கட்சிகளின் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் அணி) தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. அதில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77-ஐ மீறும் வகையில், பிறக்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் பெயர்கள் நட்சத்திரப் பேச்சாளர்களாக இடம் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோரின் பெயர்களை அக்கட்சி நீக்கியுள்ளது.