ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா 2024 மக்களவைத் தேர்தலில் காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிடுவார் என்று தேசிய மாநாடு கட்சி இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறுகையில், “கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா பாராமுல்லா மக்களவைத் தொகுதியிலும், கட்சியின் மூத்த தலைவர் ருஹுல்லா மெஹ்தி ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஒமர் அப்துல்லா கூறுகையில், “வடக்கு காஷ்மீரில் பாஜக அதிக கவனம் செலுத்துவதால், நான் வடக்கு காஷ்மீரில் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. வடக்கு காஷ்மீரில் அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் எதிராக நான் போட்டியிடவில்லை. பாஜகவின் மோசடி, துரோகம், அரசியல் சூழ்ச்சிக்கு எதிராக நான் போட்டியிடுகிறேன்” என்று தெரிவித்தார்.
கடந்த 2009-ம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக ஒமர் அப்துல்லா மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த பின்னர், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற தனது சபதத்தில் இருந்து அவர் தற்போது பின்வாங்கியுள்ளார்.
18 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது பாராமுல்லா மக்களவைத் தொகுதி. எல்லை மறுவரையறைக்கு பின்னர் பாராமுல்லா தொகுதி தீவிர அரசியல் கவனம் பெற்றுள்ளது. மக்கள் மாநாடு கட்சியின் தலைவர் சஜத் கானி லோன் இந்தத் தொகுதியில், ஒமர் அப்துல்லாவுக்கு குறிப்பிடத்தகுந்த சவாலாக இருப்பார்.
வடக்கு காஷ்மீரின் புத்காம், பீர்வாஹ், பந்திபோரா போன்ற பகுதிகளில் தனது பிரச்சாரத்தை வலுப்படுத்த தேசிய மாநாடுக் கட்சி வேட்பாளர் ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஆதரவை பெரிதும் நம்பியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த எல்லை மறுவரையறைக்கு பின்னர் புட்காம் மாவட்டத்தில் இருந்து ஷியா பிரிவு மக்கள் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் பாராமுல்லாவுடன் இணைக்கப்பட்டது இதன் அரசியல் எல்லையை மாற்றியமைத்துள்ளது.
முந்தையத் தேர்தல்களில் தேசிய மாநாடு கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது என்ஐஏ அணியில் உள்ள ஷேக் அப்துல் ரஷீத் போன்ற சுயேச்சைகளும் லங்கேட் போன்ற பகுதிகளில் செல்வாக்கு செலுத்துகின்றனர். அவர் தடுப்புக் காவலில் உள்ள போதிலும் அவரை தேர்தலில் நிறுத்த அவரது கட்சி முடிவு செய்துள்ளது.