“டைனோசரைப் போல் இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி அழிந்து விடும்” – ராஜ்நாத் சிங்

டைனோசரைப் போல் இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி அழிந்து விடும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட்டின் கார்வால் அருகே உள்ள கவுச்சர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “காங்கிரஸில் இருந்து தலைவர்கள் வெளியேறுவது தொடர்கிறது. ஒருவர் பின் ஒருவராக காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இன்னும் சில வருடங்களில் காங்கிரஸ் கட்சியானது டைனோசர் போல அழிந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.

இன்னும் சில வருடங்கள் கழித்து காங்கிரஸ் பெயரை கூறினால், அது யார் என்று குழந்தைகள் கேட்பார்கள்? காங்கிரஸ் தலைவர்கள் தினமும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். கட்சி என்பது தொலைக்காட்சியில் காட்டப்படும் பிக்பாஸ் வீட்டைப் போல மாறிவிட்டது. தினமும் ஒருவரது ஆடைகளை ஒருவர் கிழித்துக் கொள்கின்றனர்.

உங்கள் அனைவருக்கும் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். காங்கிரஸைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, வேறு எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, எந்தப் பிரதமரையும் நான் விமர்சிப்பதில்லை. ஆனால், பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, நான் 100 பைசா அனுப்பினால், மக்களுக்கு வெறும் 14 பைசா மட்டுமே சென்றடைகிறது என உண்மையை ஒப்புக்கொண்டார்.

உண்மையில் இது ஒரு மிகப் பெரிய சவால். இந்த சவாலை யாரும் ஏற்கவில்லை. ஆனால், நாங்கள் (பாஜக) ஏற்றுக்கொண்டோம். நரேந்திர மோடி பிரதமரானதும் நடைபெற்ற முதல் கூட்டத்தில், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஜன்தன் கணக்கு தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் ஏன் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என நினைக்கிறார் என்பதை என்னால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நான் நேர்மையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அன்று அவர் எடுத்த நடவடிக்கை காரணமாக இன்று மத்திய அரசின் பணம் பயனாளிகளுக்கு முழுமையாகச் சென்றடைகிறது” என்று தெரிவித்தார்.