என்னைக் கண்டால் பிரதமர் மோடிக்கு ரொம்ப பயம் : பிரச்சாரத்தில் ஆ.ராசா பெருமிதம்

மக்களவையில் அவர்களை எதிர்த்து நேருக்கு நேராக கேள்வி கேட்பதால் பிரதமர் மோடிக்கு என்னைக் கொண்டால் மிகவும் பயம் என்று திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியுள்ளார். 

தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி,  அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையில் ஒரு கூட்டணி என மூன்று கூட்டணிகளும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. இதில் திமுக கூட்டணிக்கும் பாஜக கூட்டணிக்கு மிகக் கடுமையான வார்த்தை மோதல்கள் உட்பட  பலமான போட்டி நிலவுகிறது.

தமிழ்நாட்டுக்கு வரும் பாஜக தலைவர்களும், அமைச்சர்களும் திமுகவை மிகக் கடுமையாக தாக்கி பேசுகின்றனர். அதேபோல திமுகவினரும் பாஜகவை மிகக் கடுமையாக எதிர்த்து பேசுகின்றனர். இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ.ராசா, பிரதமர் மோடிக்கு திமுகவை கண்டு பயம் என்று பேசியுள்ளார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அவர், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாகனத்தில் இருந்தபடி மக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசினார். அப்போது பேசிய அவர், “நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், இந்துக்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் என்ன உரிமை இருக்கிறது என்பது அரசியல் சாசனத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல பிரதமருக்கு, முதலமைச்சருக்கு, உச்ச நீதிமன்றத்திற்கு என ஒவ்வொருவருக்கும் என்ன உரிமை என அரசியல் சாசனம் வரையறுக்கின்றது.  மீண்டும் வெற்றி பெற்றால் இந்த அரசியல் சாசனத்தை திருத்துவேன் என்கிறார் பிரதமர் மோடி. அவர்கள் வெற்றி பெற்றால் இந்திய அரசியல் சாசனத்தையே இல்லாமல் செய்து விடுவார்கள். இப்போதே மக்களால் தேர்தெடுக்கப்பட்ட டெல்லி முதலமைச்சரையும், ஜார்க்கண்ட் முதலமைச்சரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

அரசியல் அமைப்பு சட்டம் மாற்றப்பட்டால் அதிபர் ஆட்சி முறை மட்டுமே இருக்கும். தேர்தல் என்பது ஒரே முறை தான். எதிர்த்து கேள்வி கேட்டால் சிறையில் அடைக்கப்படும் சூழல் உருவாகும். தற்போதே பல பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இனி ஒரு முறை மீண்டும் பாஜக தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனநாயகமே இருக்காது.

பிரதமர் மோடிக்கு திமுகவை நினைத்தால் பயம். குறிப்பாக என்னைக் கண்டால் ரொம்ப ரொம்ப பயம். ஏனென்றால் நான் நாடாளுமன்றத்தில் அவர்களை எதிர்த்து நேருக்கு நேராக கேள்வி கேட்கிறேன்” என்று ஆ.ராசா பேசினார்.