ஹரியாணா மாநிலம் மஹேந்தர்கரில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 குழந்தைகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியாணா மாநிலம் மஹேந்தர்கர் மாவட்டத்தில் உள்ள உன்ஹானி கிராமம் அருகே இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கியுள்ள பள்ளிக் குழந்தைகளை மீட்கப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்து வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், ஜிஎல் பப்ளிக் பள்ளி என்ற தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்துதான் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகவும், பள்ளிப் பேருந்தை மரத்தின் மீது மோதியதன் காரணமாக பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது என்றும் மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். காயமடைந்த குழந்தைகள் தற்போது அவசர மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த குழந்தைகள் அருகில் ரேவாரியில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இன்று ரம்ஜான் பண்டிகையை அடுத்து அனைத்து இடங்களிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாளில் பள்ளி இயங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.