பாஜகவினரை சர்வாதிகாரிகள் என காங்கிரஸ் அழைப்பு : ராஜ்நாத் சிங் பதில்

பாஜகவினரை சர்வாதிகாரிகள் என காங்கிரஸ் அழைப்பதற்கு பதில் கூறும் வகையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: “அண்டை நாடான பாகிஸ்தானால் தீவிரவாதத்தை தடுக்க முடியவில்லை என்று நினைத்தால், அவர்களுக்கு இந்தியா ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது. தீவிரவாதத்தை பயன்படுத்தி இந்தியாவை சீர்குலைக்க முயன்றால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும்” என்று தெரிவித்தார்.

இந்தப் பேட்டியின்போது நெருக்கடி நிலை கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்த அமைச்சர், “எமர்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்த எனக்கு, எனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பரோல் கூடத் தரப்படவில்லை. ஆனால், இன்று அவர்கள் (காங்கிரஸ்) எங்களை சர்வாதிகாரிகள் என்று அழைக்கின்றனர்” என்று சாடினார்.

முன்னதாக, அவர் அளித்த பேட்டி ஒன்றில், “இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகள் தப்பி ஓடினால் அங்கேயே சென்று அவர்களை அழிப்போம்” என்று தெரிவித்திருந்தார். அதற்கு உடனடியாக பதிலடி தந்த பாகிஸ்தான், தேர்தலை கருத்தில் கொண்டு மிகை தேசியவாத உணர்வைத் தூண்டவே இவ்வாறு பேசி இருப்பதாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.