திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் உள்ள திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் திருநீறு பூசி, குங்குமம் பொட்டு வைத்து, மாலை அணிவித்து பாஜக வேட்பாளர் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் மரியாதை செலுத்தினார்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். இவர், மத்திய பாஜக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கூறி தாமரை சின்னத்துக்கு வாக்குக் கேட்டு பிரச்சாரம் செய்கிறார்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சாத்தனூர், கொளமஞ்சனூர், தானிப்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இன்று பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது அவர், சாத்தனூர் கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு திருள்ளுவரின் நெற்றியில் திருநீறு பூசி, குங்கும பொட்டு வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்தல், நெற்றியில் திருநீறு பூசுதல், குங்குமம் வைத்தல் என பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. இதற்கு திமுக, மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் பாஜக வேட்பாளர் திருநீறு பூசி, குங்குமம் வைத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.