“கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? கருணாநிதி முதல்வராக இருந்தார், ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். அடுத்தது, உதயநிதியை முதல்வராக்க முயற்சிக்கிறார். அது நடக்காது, அது வேற விஷயம். ஏன் திமுகவில் வேறு ஆளே இல்லையா? திமுகவில் வேறு ஆட்களே கிடையாது. அனைத்து கட்சிகளும் கட்சிகளைப் போல இயங்குகின்றன. ஆனால், திமுக கார்ப்பரேட் கம்பெனி போல இயங்குகிறது” என்று ஆரணியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
திருவண்ணாமலை சேவூரில், ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து அக்கட்சியன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது: “இந்த ஆரணி மக்களவைத் தொகுதியில் 4 சட்டப்பேரவை தொகுதிகள். விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு சட்டப்பேரவை தொகுதி. இந்த 6 சட்டமன்றத் தொகுதிகளின் பிரதான தொழில் விவசாயம். இப்பகுதியில் வாழும் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். பட்டு மற்றும் நெசவுத் தொழிலை நம்பி வாழ்கின்றனர்.இந்தத் தொழில்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் சிறப்பாக நடந்தது. ஆனால், இப்போது இந்தத் தொழில்கள் அனைத்தும் நலிவடைந்து விட்டது. இந்தத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் வெற்றி பெற்றால், உங்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.
கைத்தறி, நெசவு பட்டுத் தொழிலுக்கு திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சரியான விலை கிடைப்பது இல்ல. பட்டுத் துணிகளை விற்பனை செய்ய முடியாமல் பலர் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த ஆட்சி எப்போது வந்ததோ, ஸ்டாலின் எப்போது முதல்வர் ஆனாரோ, அப்போதே தமிழகத்துக்கு சனி பிடித்துக்கொண்டது. இந்த ஏழரை சனி இத்தேர்தலில் அகற்றப்பட வேண்டும். முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி ஒரு பொம்மை முதல்வரின் ஆட்சி. அதனால்தான், எந்த தொழிலுமே செய்ய முடியாத ஒரு அவல நிலை தமிழகத்தில் நிலவுகிறது.
முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். ஒரு திட்டத்தை அறிவித்த உடன் அதற்கு ஒரு பெயரை வைத்துவிடுவார். அதற்கு ஒரு குழு அமைத்துவிடுவார். அப்படி 52 குழுக்களை அமைத்த ஒரே அரசாங்கம் இந்தியாவிலேயே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம்தான். அது திராவிட மாடல் ஆட்சி அல்ல. குழு அரசாங்கம் என்று மக்கள் பேசி வருகின்றனர். ஒரு குழு அமைத்துவிட்டால், அதோடு எல்லாம் முடிந்து போய்விட்டது. அந்த திட்டத்தை அதோடு கிடப்பில் போட்டுவிடுவார்.
இதுவரை 52 குழுக்களை அமைத்தீர்களே, இந்த 52 குழுக்களின் பணிகள் என்ன? அதிமுக வெள்ளை அறிக்கை கேட்டது. இதுவரை வெள்ளை அறிக்கை கிடைக்கவில்லை. இந்த குழுக்கள் என்ன செய்தன என்பதே தெரியவில்லை. திறமையற்ற முதல்வர் குழுக்களை அமைத்து திட்டங்களைப் போட்டு, திட்டமே நிறைவேறாமல், மூன்றாண்டு காலம் கழித்ததுதான் மிச்சம். மேலும் அனைத்து துறைகளிலும் ஊழல். ஊழல் இல்லாத துறையே கிடையாது. ஏற்கெனவே ஊழலுக்காக ஒரு அரசாங்கம் கலைக்கப்பட்டது என்றால், அது திமுக அரசுதான். கருணாநிதி முதல்வராக இருந்த காலக்கட்டத்திலேயே ஊழல் பிறந்துவிட்டது. வீராணம் ஊழல், பூச்சிமருந்து ஊழல், அரிசி பேர ஊழல், என்று ஊழலுக்குச் சொந்தமான கட்சி திமுக. அதேபோல் வாரிசு அரசியல்.
கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? கருணாநிதி முதல்வராக இருந்தார், ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். அடுத்தது, உதயநிதி முதல்வராக்க முயற்சிக்கிறார். அது நடக்காது, அது வேற விஷயம். ஏன் திமுகவில் வேறு ஆளே இல்லையா? திமுகவில் வேறு ஆட்களே கிடையாது. அனைத்து கட்சிகளும் கட்சிகளைப் போல இயங்குகின்றன. ஆனால், திமுக கார்ப்பரேட் கம்பெனி போல இயங்குகிறது. இதனால், மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. எப்போதும் அவரது குடும்பத்தைப் பற்றிய சிந்தனைதான் முதல்வர் ஸ்டாலினுக்கு வந்து கொண்டிருக்கும். அதிமுகவில் அப்படி இல்லை. இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள ஒரே கட்சி அதிமுக ஒன்றுதான்.
ஸ்டாலின் காண்பது பகல் கனவு, பலிக்காது. தமிழக மக்களிடம் செல்வாக்கை இழந்து விட்டதால், இண்டியா கூட்டணி என்ற பெயரில் வாக்குகளை பெற நாடகம் நடத்துகிறார். 2021-ல் நடைபெற்ற தேர்தலில் 520 வாக்குறுதிகளை அளித்த ஸ்டாலின், 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. சட்டப்பேரவையில் 98 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக பச்சை பொய் சொல்கிறார். காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்றார். குறைக்கவில்லை. இப்போது பெட்ரோல், டீசல் விலையை ரூ.65-ஆக குறைக்கப்படும் என்கிறார்.
வெளிநாட்டில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி, அதிக விலைக்கு மத்திய அரசு விற்பனை செய்கிறது. டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மக்களை பாஜக அரசும், திமுக அரசும் வாட்டி வதைக்கிறது. அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம் உட்பட அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்ததுதான் திமுகவின் சாதனை. 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தனி சட்டத்தை கொண்டு வந்து, ஏழை குடும்ப மாணவர்களின் மருத்துவ கனவை அதிமுக அரசு நனவாக்கியது. இதன்மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்கின்றனர்.
38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மக்களவையில் அழுத்தம் கொடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்துக்கு நிதியை பெறாமல், ஒற்றை செங்கல்லை காட்டி விளம்பரம் தேடிக் கொள்கிறார் அமைச்சர் உதயநிதி. செய்யாறு சிப்காட் திட்டத்துக்காக விளை நிலங்களை கொடுக்க மறுத்து போராடி வரும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் திமுக அரசு கைது செய்தது கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும், என்று அவர் பேசினார். இந்த பிரச்சாரத்தின் போது, முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சிவி சண்முகம், சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்ரமணியன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.