அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால், ஆம் ஆத்மி கட்சியை பாஜக ஒழித்துவிடும் என அக்கட்சி எம்பி- சஞ்சய் சிங் கூறியுள்ளார்.
டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே வழக்கில் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டார்.
ஆனால், அவருக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து அவர் 6 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் சமீபத்தில் வெளியே வந்தார். அடுத்தடுத்து ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் டெல்லியில் பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே அரசியல் போர் வெடித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.பி- சஞ்சய் சிங் கூறியதாவது, “முதல்வர் கேஜ்ரிவால் பதவியில் இருந்து விலகினால், பாஜக, ஆம் ஆத்மி கட்சியை அழித்துவிடும். எங்களது அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
பஞ்சாப் முதல்வர் மற்றும் அமைச்சர்களை சிறையில் அடைத்துவிட்டு ராஜினாமா செய்யச் சொல்வார்கள். மு.க.ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி, பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சிறையில் அடைப்பார்கள்.
டெல்லியின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை சிறையில் அடைக்க மோடி அரசு விரும்புகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, அர்விந்த் கேஜ்ரிவால் தனது வழக்கறிஞரைச் சந்தித்தார். அப்போது, எம்எல்ஏ-க்கள் தங்கள் பகுதிகளுக்குச் சென்று மக்கள் பிரச்சினைகளை தீர்க்குமாறு செய்தி தெரிவித்தார். இதற்காக அவருக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குடும்பத்தினரையும், வழக்கறிஞர்களையும் சந்திப்பதில் இருந்து தடுக்கப்படுவீர்கள் என கேஜ்ரிவாலை அச்சுறுத்தியுள்ளனர்” என்று அவர் கூறினார்.