“பிரதமர் மோடியைக் கண்டால் முதல்வர் ஸ்டாலின் அவ்வளவு பயப்படுகிறார். தனது சாதனைகளை சொல்வதை தவிர மோடி அர்ச்சனை தான் அதிகமாக உள்ளது. அண்ணன் ஸ்டாலினுக்கு இப்போது தூக்கம் வரவில்லை” என்று பாஜக தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.
பாஜக தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையில் செய்தியாளர்களைச் சந்த்தித்தார். அப்போது தமிழிசை கூறுகையில், “பிரதமர் மோடி தமிழகம் அடிக்கடி வர, வர முதல்வர் ஸ்டாலினுக்கு பதற்றம் அதிகரித்துள்ளது. தேர்தல் சீசனில் மட்டும் வந்துபோக இது என்ன பறவைகள் சரணாலயமா என்று பிரதமரின் வருகை குறித்து ஸ்டாலின் கேட்கிறார். அத்துடன் எல்லா பொய்களையும் அவிழ்த்துவிட்டு இருக்கிறார்.
ஆம், சரணாலயம்தான். தமிழ் மக்களை தனது சரணாலயமாக பிரதமர் மோடி பார்க்கிறார். தமிழக மக்களுக்கு பாதுகாவலராக இருக்கிறார். ஒரு நாட்டின் பிரதமர் அந்த நாட்டுக்குட்பட்ட மாநிலத்துக்கு வருவதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது.
அனைத்துக்கும் கேரண்டி கேட்கிறார் முதல்வர். நீட் விலக்கு என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தது திமுக. ஆனால், நீட் விலக்கை அமல்படுத்த முடியும் என்று திமுகவால் கேரண்டி தர முடியுமா. நீட் தேர்வு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரியாத ஒரு முதல்வர் இருக்கிறார்.
சட்டத்தை மதிக்காத ஒரு முதல்வரை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எவ்வளவு நாட்கள் தான் தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள். தமிழ் மக்களைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் இல்லை. மன்மோகன் சிங் எத்தனை வெள்ளத்தை வந்து பார்வையிட்டார். அவரை ஏன் கேட்கவில்லை.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு கேரண்டி தர முடியுமா என்கிறார். மத்தியில் எத்தனை வருடம் கூட்டணி ஆட்சி நடத்தினீர்கள். அப்போது எல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி அக்கறை இல்லையே. எத்தனை மத்திய மந்திரிகள் தமிழகத்தில் இருந்து இருந்தார்கள். அன்றைக்கு அவர்கள் என்ன செய்தார்கள். தூக்கத்தில் இருந்து எழுந்தது போல் இன்றைக்கு அனைத்துக்கும் கேரண்டி கேட்டுள்ளார். இவரால் தமிழக மக்களுக்கு எந்த கேரண்டியும் கொடுக்க முடியாது. சமூக நீதி பேசும் திமுக அரசால், வேங்கைவயல் பிரச்சினையை இன்றைக்கும் தீர்க்க முடியவில்லை.
மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்று சொல்வது தவறு. 10 ஆண்டுகளாக நல்லாட்சி கொடுத்து இருக்கிறார்கள். பிரதமரை கண்டால் முதல்வர் ஸ்டாலின் அவ்வளவு பயப்படுகிறார். தனது சாதனைகளை சொல்வதைத் தவிர மோடி அர்ச்சனை தான் அதிகமாக உள்ளது. அண்ணன் ஸ்டாலினுக்கு இப்போது தூக்கம் வரவில்லை.” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.