அதிமுகவை லெட்டர் பேடு கட்சியாக்கிவிட்டார் இபிஎஸ் : கர்நாடக மாநில செயலாளர் அதிரடி புகார்

கர்நாடகாவில் அதிமுகவை லெட்டர் பேடு கட்சி போல் நடத்துவதாக கூறி அம்மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக மாநில அதிமுக செயலாளராக பதவி வகித்து வருபவர் எஸ்.டி.குமார். கடந்த 2022-ல் பொறுப்பில் இருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவரை அப்பொறுப்பில் நியமித்தனர். கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது அதில் போட்டியிடுவதற்காக அதிமுக தலைமையிடம் குமார் விருப்ப மனு அளித்தார். ஆனால், அவருக்கு சீட் மறுக்கப்பட்டு கர்நாடக மாநில அவைத்தலைவர் அன்பரசன் புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட எஸ்.டி.குமார் விருப்ப மனு அளித்தார். ஆனால், அதுகுறித்து அதிமுக தலைமை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. கர்நாடகாவில் ஏப்ரல் 26 மற்றும் மே 7-ம் தேதி என இரண்டு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் அங்கே தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக எஸ்.டி.குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிற மாநிலங்களில் ஏன் அதிமுகவை வளர்க்க வேண்டும் என மேலிடம் நினைக்கிறது. இதனால் கர்நாடக மாநில அதிமுக நிர்வாகிகள் கடும் வேதனையில் உள்ளனர். மக்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதைக் கூட கட்சி மேலிடம் கூற மறுக்கிறது. ஜெயலலிதாவுக்குப் பிறகு கர்நாடக அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை மதிப்பளிப்பதில்லை. கர்நாடகாவில் அதிமுகவை லெட்டர் பேடு கட்சி போல் எடப்பாடி பழனிசாமி நடத்திக்கொண்டிருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.