டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவுக்கு ஏப்ரல் 23 வரை காவல் நீட்டிப்பு

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவை அமலாக்கத் துறை மார்ச் 15-ம் தேதி கைது செய்தது. அவரை முதலில் 7 நாட்களும் பிறகு மேலும் 3 நாட்களும் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அமலாக்கத் துறை காவல் முடிந்து மார்ச் 26-ம் தேதி கவிதா டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ஏப்ரல் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கவிதா டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கவிதாவின் நீதிமன்ற காவல் இன்று நிறைவடைந்த நிலையில், அமலாக்கத் துறை அவரை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் காலையில் ஆஜர்படுத்தியது. அப்போது கவிதாவின் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க அமலாக்கத் துறை கோரியது. இதனை ஏற்ற நீதிமன்றம் காவலை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது.

இதனிடையே, கவிதா நீதிமன்றத்துக்கு எழுதிய கடிதத்தை அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாசித்தார். கவிதா அக்கடிதத்தில், “நான் இந்த வழக்கினால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட மற்றும் அரசியல் நற்பெயர் குறிவைக்கப்பட்டுள்ளது. எனது மொபைல் போன் அனைத்துத் தொலைக்காட்சி சேனல்களிலும் காட்டப்படுகிறது. இது எனது தனியுரிமையை நேரடியாக மீறும் செயல்.

நான் புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கிறேன், எனது அனைத்து வங்கிக் கணக்கு விவரங்களையும் அளித்துள்ளேன். நான் அழித்ததாக அமலாக்கத் துறை கூறும் அனைத்து மொபைல் போன்களையும் ஒப்படைத்து விடுகிறேன்.” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறும் போது செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, “இந்த வழக்கு முழுக்க முழுக்க வாக்குமூலத்தின் அடிப்படையில் போடப்பட்ட வழக்கு. இது எதிர்க்கட்சிகளை குறிவைத்துப் போடப்பட்ட ஓர் அரசியல் வழக்கு. சிபிஐ ஏற்கெனவே சிறையில் எனது வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டது” என்று தெரிவித்தார்.