“அவர்கள் ராமரை வியாபாரம் செய்பவர்கள், நாங்களோ ராமரை பூஜிப்பவர்கள்” – பாஜக மீது காங்கிரஸ் கடும் தாக்கு

“அவர்கள் ராமரை வியாபாரம் செய்பவர்கள், நாங்களோ ராமரை பூஜிப்பவர்கள்” என்று பாஜகவை காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக தாக்கி உள்ளார்.

ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் கட்சி எதிர்த்தது என்று சத்தீஸ்கரில் நேற்று நடந்த பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், அதில் பாஜகவை கடுமையாக தாக்கி உள்ளார். அவர் தனது பேட்டியில், “ஜனவரி 22-ம் தேதி நடைபெற்ற அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா என்பது அரசியல் நிகழ்வாக மாற்றப்பட்டது. ஓர் அரசியல் நபருக்காக அந்த விழா நடத்தப்பட்டது. அவர்கள் ராமரை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள். ஆனால், நாங்கள் ராமரை பூஜிப்பவர்கள்.

இன்று எனது பிறந்தநாள். எனது பெயரான ஜெய்ராம் ரமேஷ் இரண்டிலும் ராம் இருக்கிறது. ஒருவரும் எங்களை ராமருக்கு எதிரானவர்கள் என்று அழைப்பதில்லை. மதத்தை பாஜக அரசியலாக்குகிறது. அரசியலில் மதத்தை கலக்கிறது” எனக் குற்றம் சாட்டினார்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி 22-ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

“2019-ல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும், கோடிக்கணக்கான ராம பக்தர்களின் உணர்வுகளுக்கும் காங்கிரஸ் கட்டுப்படுகிறது. கும்பாபிஷேக விழா, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் நிகழ்ச்சி என்பதால் அதில் பங்கேற்பதற்கான அழைப்பை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் மரியாதையுடன் நிராகரிக்கிறார்கள்” என காங்கிரஸ் தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டம், அமாபால் கிராமத்தில் பாஜக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக அயோத்தியில் ராம் லல்லா கூடாரத்தில் தங்கிருந்தார். பாஜகவின் அதிதீவிர முயற்சியால் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. மக்களின் 500 ஆண்டு கனவு, நனவாகி உள்ளது. ஆனால் ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸும் இந்தியா கூட்டணி கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன.

ராமர் கோயில் திறப்பு விழாவை காங்கிரஸ் தலைவர்கள் முழுமையாக புறக்கணித்தனர். திறப்பு விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். வாக்கு வங்கி அரசியலை மையமாகக் கொண்டு காங்கிரஸ் செயல்படுகிறது. அந்த கட்சியின் தேர்தல் அறிக்கை, முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கையாக இருக்கிறது” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.