“சர்க்கரை என்று சொன்னால் இனிக்காது, வாயில் ஊட்டினால்தான் இனிக்கும் என்பது போல் திமுக பழைய ஒய்வூதிய திட்டத்தை நிறைவேற்றறுவதாக சொன்னால் மட்டும் போதாது, அதை நிறைவேற்றிக்காட்ட வேண்டும். ஆனால், தேர்தலுக்கு தேர்தல் பழைய ஒய்வூதிய திட்டத்தை சொல்லி அரசு ஊழியர்களை திமுக ஏமாற்றுகிறது.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
இன்று அதிகாலை 7.30 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் மதுரை அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து, தரைக்கடை வியாபாரிகள், மாநகராட்சி கடை வியாபாரிகளிடம் நடந்து சென்று ஆதரவு திரட்டினார்.
அப்போது வியாபாரிகளிடம், காய்கறி வாங்க வந்த பொது மக்களிடம் காய்கறி விலைகள் நிலவரம் கேட்டறிந்தார். அதேபோல் வியாபாரிகளிடம் காய்கறிகள் எங்கிருந்து வருகின்றன? லாபம் கிடைக்கிறதா? மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு தேவையான வசதிகள் என்ன? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை பழனிசாமி கேட்டார்.
அதற்கு அவர்கள், மார்க்கெட்டை இதுவரை எந்த ஒரு அமைச்சரோ, எம்பி, மேயர், கவுன்னசிலர்களோ எட்டடிப் பார்க்கவில்லை. நீங்களாவது நேரடியாக வந்து எங்கள் குறையைக் கேட்டது மனநிறைவாக இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு எங்களை மறந்துவிடாமல் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தாருங்கள் என்று கோரிக்கை வைத்தனர்.
வியாபாரிகளை சந்தித்தப்பின் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாட்டுத்தாவணி காய்கறி, பழ மார்க்கெட்ட வியாபாரிகளை நேரில் சந்திக்க வந்தேன். அவர்கள் தங்களுடைய நீண்ட கால பிரச்சினைகள், கோரிக்கைகளை தெரிவித்தனர். அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.
அதிமுகவை பொறுத்தவரையில் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளோம். பிடித்தம் இல்லாமல் அகவிலைப்படி கொடுத்தோம். கடந்த 3 ஆண்டுகள் திமுக ஆட்சியில் ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி வழங்கும்போது 6 மாதம் தொகையைப் பிடித்தம் செய்து கொடுத்துள்ளார்கள். அரசு ஊழியர்ளுக்கு திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பழைய ஒய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். தேர்தலில் வெற்றி பெற்றதும் மறந்துவிட்டார். இதுவரை பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை.
தற்போது மக்களவைத் தேர்தல் வந்துவிட்டதால் மீண்டும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படுவதாக வாக்குறுதி கொடுக்கிறார்கள். ஆனால், அரசு ஊழியர்கள், அரசை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
‘சர்க்கரை என்று சொன்னால் இனிக்காது, வாயில் ஊட்டினால்தான் இனிக்கும்’ என்பது போல் பழைய ஒய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதாக சொன்னால் மட்டும் போதாவது. அதை நிறைவேற்றிக் காட்ட வேண்டும். தேர்தலுக்கு தேர்தல் இந்த வாக்குறுதியை கூறி அரசு ஊழியர்களை திமுக ஏமாற்றுகிறது. இதுபோல்தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் வாக்குறுதி கொடுப்பதும், ஏமாற்றுவதும் திமுகவின் வாடிக்கையாகிவிட்டது.
பாமக எங்களால் எந்தப் பயனும் அனுபிக்கவில்லை என்றால் எதற்கு மாறிமாறி எங்களுடன் கூட்டணி வைத்தார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் அன்புமணி ராமதாஸ் ஒரு நிலைப்பாடு கொண்டுள்ளார். எதிர்க்கட்சிகளே புகழக்கூடிய வகையில்தான் நாங்கள் ஆட்சி நடத்தினோம்.
திமுக கார்ப்பரேட் கம்பெனி போன்றது. குடும்ப ஆட்சிதான் நடத்துவார்கள். எங்கள் கட்சி மக்களுக்கானது, தொண்டர்களுக்கானது. மக்களுக்கான ஆட்சியைத்தான் நாங்கள் நடத்துவோம். ஸ்டாலின் பிரச்சாரத்தில் பொய் பேசுகிறார். நான், பிரச்சாரத்தில் கடந்த காலத்தில் அவர் கூறிய வாக்குறுதிகளை ஆதாரத்துடன் போட்டுக் காட்டிதான் பிரச்சாரம் செய்கிறேன். அவரால் அப்படிப் பேச முடியுமா?. அதிமுகவுக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அது இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தரும்” என்று எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.